

சென்னை: சென்னையில் திருவொற்றியூர் தேரடி உள்ளிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமானத்தை ஆய்வு செய்ய பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் மெட்ரோ ரயில்களில் தினசரி 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர்பயணம் செய்கின்றனர் பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், சென்னையில் திருவொற்றியூர் தேரடி உட்பட சில மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமானத்தின் தரத்தை ஆய்வு செய்ய பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற் கூரையின்கீழ் பொருத்தப்பட்ட அலங்கார அமைப்பின் ஒரு துண்டு இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது, ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 15 நாட்களுக்கு முன்பு, திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையத்தில் சில கட்டுமான கழிவுகள் விழுந்து 63 வயது முதியவர் லேசான காயமடைந்தார். இதனால், சில மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமானத் தரம் குறித்த அச்சம் பயணிகள்மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ பயணிகள் சிலர் கூறியதாவது: திருவொற்றியூர் தேரடி, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் சிறு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, சில மெட்ரோ ரயில்நிலையங்களின் கட்டுமான தரத்தில்கேள்வி எழுகிறது. எனவே, திருவொற்றியூர் தேரடி உட்பட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டுமானத்தை ஆய்வு செய்ய வேண்டும். இதன்மூலம்,தரம் குறைவான கட்டுமானத்தை சீரமைக்கவும் பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்யவும் முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ரயில்நிலைய வளாகம் அல்லது வழித்தடங்களில் இருந்து அகற்றப்படாத கட்டுமானப் பொருட்களால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கலாம். நிலையங்களின் கட்டுமானத் தரம் மற்றும் வளாகத்தில் இருந்து தற்காலிக பொருட்களை அகற்றுவது தொடர்பான கட்டுமானம், நிறைவு பணிகள்மற்றும் நெறிமுறைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி வருகிறோம்.
இப்பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யப்படும் என்றனர்.