

சென்னை: தினசரி வங்கியில் பணம் செலுத்த செல்லும்போது பணத்தை பறிமுதல் செய்யக் கூடாது என, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தமிழக தேர்தல் அதிகாரியிடம், தமிழ்நாடு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழகதலைமை தேர்தல் ஆணையரிடம் தமிழ்நாடு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது முறையான ஆவணங்களை வைத்திருக்குமாறு தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
உத்தரவிட வேண்டும்: பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் தினமும் வங்கியில்பணம் செலுத்தச் செல்லும்போது செலுத்தப்படும் வங்கியின் செல்லான், வங்கியின் கடிதம், ஜிஎஸ்டி சான்றிதழ், பான் கார்டு எண், கடந்த 6மாதகால வங்கிப் பரிவர்த்தனை பட்டியல் ஆகியவற்றை உடன் கொண்டு செல்கின்றனர்.
இருப்பினும் தேர்தல் பறக்கு படை அதிகாரிகள் சிலர் பணத்தை பறிமுதல் செய்கின்றனர். பின்னர், ஓரிரு நாட்கள் கழித்து திரும்ப அளிக்கின்றனர்.
பணத்தைத் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்வதால் எங்களால் முன்கூட்டியே பணம் செலுத்தி பெட்ரோலியப் பொருட்களை வாங்க முடியாதநிலை ஏற்படுகிறது.
எனவே, தேர்தல் முடியும் வரை பெட்ரோல் பங்க் விநியோகஸ்தர்கள் அல்லது ஊழியர்கள் பணம் கொண்டு சென்றால் அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யக்கூடாது. இதுதொடர்பாக, பறக்கும் படைக்கு உரிய உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.