

சென்னை: சென்னையில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
அதில் அவர் பேசியதாவது: பிற அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை ஏற்படுத்தக்கூடாது. பிற கட்சிக் கூட்டங்களில் தனது கட்சி ஆதரவாளர்களைக் கொண்டு கேள்வி எழுப்புவதன் மூலமும், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்வதன் மூலமும் தொல்லை கொடுக்கக்கூடாது.
பிற கட்சிப் பேரணிகள் நடைபெறும் பாதை வழியாக அடுத்த கட்சியினர் பேரணியை நடத்த முற்படுதல், ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்றொரு கட்சியின் தொண்டர்கள் கிழித்து எறிதல் ஆகிய செயல்களில்ஈடுபடக் கூடாது. ஊர்வலம் செல்லும்போது ஊர்வலத்துக்கு வலதுபுறம் போதுமான இடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் ரூ.95 லட்சம் வரை செலவிடலாம். தேர்தல் முடிவுகள் வெளியிட்ட30 நாட்களுக்குள் தங்கள் செலவு கணக்கை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது அளிக்கும் சுய உறுதிமொழி ஆவணத்தில் தனது சமூக வலைதள கணக்கு பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அளிக்கப்படும் அரசியல் விளம்பரங்கள் முன் அனுமதி பெற்றதாக இருக்க வேண்டும்.
தற்காலிக பிரச்சார அலுவலகங்களை அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்தோ, வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர்தொலைவுக்குள்ளோ அமைக்கக்கூடாது. தற்காலிக அலுவலகங்களில் ஒரே ஒரு கட்சிக் கொடியை, ஒரு கட்சி பதாகை போட்டோ 4 அடி அகலம், 8 நீளத்தில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகள், பிரச்சாரம், ஊர்வலம், பொதுக்கூட்டம் போன்றவற்றுக்கு ஒற்றைச் சாளரமுறையில் அனுமதி அளிக்குமாறு கோரியுள்ளனர். அது செயல்படுத்தப்படும். 85 வயதுக்கு மேற்பட்டோர் சென்னையில் 65 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் எளிதில் வாக்களிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்டதேர்தல் அலுவலர்கள் ஆர்.லலிதா,வி.ஜெயசந்திர பானு ரெட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, ஜி.எஸ்.சமீரன், ஷரண்யா அறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.