Published : 19 Mar 2024 06:16 AM
Last Updated : 19 Mar 2024 06:16 AM
சென்னை: பெண் ஒருவர் தவறவிட்ட 40 பவுன் தங்க நகை மற்றும் ரூ.61 ஆயிரம் ரொக்கத்தை பத்திரமாக எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த முதியவரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சுந்தரம் (68). இவர் தனது இருசக்கர வாகனத்தில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே உள்ள ஓட்டலுக்கு சென்றார். மீண்டும் திரும்பிவந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்கும்போது அந்த இடத்தில் பெண்கள் வைத்திருக்கும் கைப்பை கேட்பாரற்ற நிலையில் இருந்தது.
அதை திறந்து பார்த்தபோது 40 பவுன் தங்க நகைகள், 2 கிராம் வெள்ளி, ரொக்கம் 61,404 மற்றும் ஏடிஎம் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்பட பல முக்கிய ஆவணங்கள் அதில் இருந்தன. உடனடியாக அவர் இதுகுறித்து பரங்கிமலை போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
மடிப்பாக்கம் காவல் சரக உதவி ஆணையர் (பொறுப்பு பரங்கிமலை) புருஷோத்தமன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி கேமரா மற்றும் கைப்பையில் இருந்த ஆவணங்கள் அடிப்படையில் நகை பணத்தை தவற விட்டது கிண்டி, மடுவன்கரையைச் சேர்ந்த ஜான்சிராணி (54) என்பது தெரியவந்தது. அண்மையில் திருமணமான அவருடைய மகளின் நகைகளை பையில் வைத்திருந்ததும், அதை தவறுதலாக மறந்து வைத்து சென்றதும் தெரிந்தது. இதையடுத்து, அந்த நகைகள் அவரது கணவர் மற்றும் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கைப்பையை நேர்மையாக போலீஸாரிடம் ஒப்படைத்த முதியவர் சுந்தரத்தை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். மேலும் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த மடிப்பாக்கம் உதவி ஆணையர் புருஷோத்தமன் மற்றும் போலீஸாரைம் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT