

சென்னை: தமிழகத்தில் பொன்னுக்கு வீங்கி, சின்னம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த மாதத்தில் மட்டும் மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்பு 250 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நோயால் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உமிழ்நீர் சுரப்பிகளில்அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்படக்கூடும். அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் காணப்படலாம்.
இதற்கென தனியாக தடுப்பு மருந்துகள் தேவையில்லை என்பதால், நோய் தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தாலே அந்தபாதிப்பில் இருந்து விடுபடலாம் என்று மருத்துவநிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், வேரிசல்லா என்னும் வைரஸ் மூலம் பரவக் கூடியது சின்னம்மை நோய் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. கோடை காலத்தில் சீதோஷ்ணநிலை அதிகரிக்கும்போது குப்பை, குவியல்களில் இருந்து வைரஸ்கள் உருவாகி காற்றில் கலந்து பரவுகின்றன. அதில் ஒரு வகையான வைரஸ்தான் வேரிசல்லா ஆகும்.
எதிர்ப்பாற்றல் குறைவு: அசுத்தமான சூழலுக்குநடுவே வசிப்பவர்களுக்கும், நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களுக்கும் வேரிசல்லா வைரஸ் மூலம் சின்னம்மை பரவக்கூடும். அவர்களின் எச்சில் மூலம் பிறருக்கும் அது பரவ வாய்ப்புள்ளது. சரியாக கவனித்து சிகிச்சைபெறாவிட்டால், நிமோனியா, மூளைக் காய்ச்சல், சிறுநீரக அழற்சி போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது: பொன்னுக்கு வீங்கி பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு வாரத்தில் தானாகவே அது சரியாகிவிடும். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டவர், தம்மைதனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது.
சின்னம்மையை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சின்னம்மைக்கான ஏசைக்ளோவிர்' மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அனுப்பிவைக்கப்படும். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சின்னம்மை பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.