

கர்நாடகா, தமிழகம் இடையே நீண்ட காலமாக தொடரும் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், நீதி நிலைநாட்டப்படும் என நம்புவதாக விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக கர்நாடகா முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் முயற்சி மேற்கொண்டார். ஆனால், அதற்கு சித்தராமையா எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. இதுவரை காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நியாயமான முறையில் திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீர்கூட திறந்துவிடப்படவில்லை. இதனால், 5000 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் நீதியை நிலைநாட்டும் என நம்புகிறோம்" என்றார்.
சென்னையில் பாதுகாப்பு..
காவிரி வழக்கில் தீர்ப்பு வருவதையொட்டி சென்னையில் கர்நாடக வங்கி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டல்களுக்கு போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், தமிழக - கர்நாடகா எல்லையில் ஓசூர் பகுதியில் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.