Published : 19 Mar 2024 04:04 AM
Last Updated : 19 Mar 2024 04:04 AM
வேலூர்: அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நடிகர் மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாகக் கூறி வாக்கு சேகரிப்பு பணியை தொடங்கிஉள்ளார். வேலூர் கோட்டையில் கிரிக்கெட் விளையாடிய நடிகர் மன்சூர் அலிகான், ‘இரட்டை இலை கொடுத்தால் போட்டியிடுவேன், இல்லாவிட்டால் வாழை இலையில் போட்டியிடுவேன்’ என்றார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளார். வேலூரில் தங்கியுள்ள நடிகர் மன்சூர் அலிகான், வேலூர் கோட்டையில் நேற்று காலை இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடியதுடன், இறகுபந்து விளையாடி வாக்குகளை சேகரித்தார்.
அப்போது, நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நான் நின்றால் மாநாடு. நடந்தால் ஊர்வலம். எப்போது, வேலூரில் இறங்கினேனோ அப்போதே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டேன். அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை பேசிவிட்டு வந்தேன். ஆனால், அது குறித்து இன்னும் எதுவும் தகவல் இல்லை. நான் வேலூர் தொகுதியில் நிற்கிறேன். அவர்கள் கொடுத்தால் இரட்டை இலை, இல்லாவிட்டால் வாழை இலை. இலை போட்டு சாப்பிட வேண்டியது தான்.
வாழை இலை உடம்புக்கு நல்லது. இரட்டை இலையும் உடம்புக்கு நல்லது. இருந்தாலும், கறிவேப்பிலையாக மாறிவிடக் கூடாது. தாய் கழகம் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு என்னுடைய திப்பு சுல்தான் வாளை சுழற்றுவேன். எதிர்க் கட்சியினர் கேள்வி கேட்க மாட்டார்கள். ஏனென்றால், ஈ.டி ( அமலாக்கத் துறை ) வந்து விடும் என்ற பயம். நமக்கு அந்த பயம் இல்லை. ஒரே மக்கள் ஒரே நாடாக இந்தியா உள்ளதா? ஒரே தேர்தல் மட்டும் எப்படி சாத்தியம். பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள 22 தடுப்பணைகளையும் வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT