

விருதுநகர்: திமுக கூட்டணியில் விருதுநகர் மக்களவைத் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் தக்கவைத்துக் கொண்டதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
திமுகவின் இரு முக்கிய அமைச்சர்கள் இருக்கும்போதும் திமுக கூட்டணியில் விருதுநகர் மக்களவைத் தொகுதியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது காங்கிரஸ் கட்சி. இம்முறையும் மாணிக்கம் தாகூர் மீண்டும் களம் இறக்கப்படுவார் என்பதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி வரலாற்றில் அழிக்க முடியாத சுவடுகளைக் கொண்டது விருதுநகர் தொகுதி. இருபெரும் பிரதமர்களை நாட்டுக்கு தந்தவர் விருதுநகரைச் சேர்ந்த காமராஜர். அதனால்தான் அவர் கிங் மேக்கர் என அழைக்கப்பட்டார். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி பாரம்பரியம் மிக்க விருதுநகர் தொகுதியை இம்முறையும் விட்டுக்கொடுக்காமல் கேட்டுப்பெற்றுள்ளது.
கடந்த 2019 தேர்தலில் 'சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு சீட் கொடுக்கக் கூடாது, வாரிசு அரிசியல் இருக்கக் கூடாது' என முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் குரல் கொடுத்ததால், அவரது அண்ணன் மகனான 'மாணிக்கம் தாகூருக்கு விருதுநகர் தொகுதியில் வாய்ப்புக் கொடுக்கக் கூடாது' என ப.சிதரம்பரம் தரப்பினரும் பிரச்சினையை கிளப்பினர்.
இது கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூரை வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கணேசன், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் காளிதாஸ், சிவகாசி முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கட்சியின் மேலிடத்திற்கு தொடர்ந்து புகார் கடிதங்கள் அனுப்பினர்.
அதோடு, விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட் கோஷ்டி பூசலால் கடந்த முறை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடலாம் என்ற பேச்சும் அடிபட்டது. இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி களம் இறங்கி வெற்றிபெற்றார் மாணிக்கம் தாகூர். யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் கடந்த முறை போல் குழப்பம் அல்லாமல் இம்முறை மீண்டும் மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கே வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
அதோடு, கட்சிக்குள் சிலர் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டால் அவர்களை அடையாளம் கண்டு சரிகட்டும் முயற்சியிலும் கட்சி நிர்வாகிகள் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரச்சாரம் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வெற்றியை எளிதாக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.