கூட்டணி அறிவிப்பில் நிலவும் குழப்பத்தால் இரு அணிகளாக செயல்படும் பாமக நிர்வாகிகள்

கூட்டணி அறிவிப்பில் நிலவும் குழப்பத்தால் இரு அணிகளாக செயல்படும் பாமக நிர்வாகிகள்
Updated on
1 min read

தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன. 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து, அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகும் நிலையில் இருந்தது.

அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விரும்பி வந்த நிலையில், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தத் தொடங்கினார். அதிமுக கொடுப்பதைவிட கூடுதல் தொகுதிகள் மற்றும் மத்திய அமைச்சர் பதவி வழங்குவதாக பாஜக உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.

அதிமுகவுடன் ராமதாஸும், பாஜகவுடன் அன்புமணியும் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருவதால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக யாருடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் இருவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இதற்கிடையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை பாமக எம்எல்ஏக்கள் சந்தித்து பேசியுள்ளனர். அதிமுக என ராமதாஸும், பாஜக என அன்புமணியும் இருப்பதால், பாமகவில் ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரு பிரிவுகளாக நிர்வாகிகள் செயல்பட தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, “பாமக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்று எங்களுக்கே தெரியவில்லை. அதிமுக, பாஜக என மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் ஒரே குழப்பமாக உள்ளது. ஓரிரு நாளில் கூட்டணி அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. பாஜகவுடன் கூட்டணி என்றால் வரும் 19-ம் தேதி சேலத்தில் பிரதமர் பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி பங்கேற்பார்கள்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in