

வரும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, திருப்பூரில் உள்ள கொமுக நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமியின் வீட்டுக்கு நேற்று சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவருக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது, பெஸ்ட் ராமசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழ்நாட்டில் அண்ணாமலை வருகைக்கு பின்பு பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைக்க கொமுக தனது ஆதரவை தெரிவிக்கிறது” என்றார்.
பின்னர், அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: மோடி நாடு முழுவதும் மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி, கோவையில் நாளை (இன்று) மக்களை சந்திக்கிறார். ஒரு பிரதமரே வீதிக்கு வருகிறார் என்றால், அது நல்லது தானே.
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் பிரதமரை அழைத்து செல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.
இண்டியா கூட்டணி நிறைவு யாத்திரையில் ராகுல்காந்தி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.
செல்லும் இடங்களில் மோடி வாழ்க முழக்கமும், ஜெய்ஸ்ரீராம் கோஷமும் தான் கேட்கிறது. மோடி டீ விற்றார். இண்டியா கூட்டணியில் இருப்பவர்கள் நாட்டை விற்றவர்கள்.