Published : 18 Mar 2024 09:37 AM
Last Updated : 18 Mar 2024 09:37 AM
மும்பையில் நேற்று நடந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே சந்திப்பின்போது, தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதாகவும், இன்று பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 2019 தேர்தலில் போட்டியிட்ட திருவள்ளூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி ஆகிய 9 தொகுதிகளிலும் இந்த முறையும் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திமுக நடத்திய கள ஆய்வில் கரூர், ஆரணி, திருச்சி, தேனி ஆகிய 4 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த 4 தொகுதிகளுக்கு மாற்றாக வேறு தொகுதிகளை கேட்குமாறு திமுக சார்பில் காங்கிரஸை அறிவுறுத்தியதாக தெரிகிறது.
ஆரணிக்கு பதில் கடலூர், திருச்சிக்கு பதில் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் பரிந்துரை செய்ததில் அதை திமுக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
தேனிக்கு பதில் திருநெல்வேலி அல்லது வேறு ஒரு தென் மாவட்ட தொகுதியை பரிந்துரை செய்ததில், அதையும் திமுக ஏற்றுக்கொண்டதாம். ஆனால் கரூர் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என ஜோதிமணி உறுதியாக இருப்பதால், தொகுதிகளை இறுதி செய்வதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க நேற்று மும்பை சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுடன், ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் ஆலோசனை நடத்தி, தொகுதிகள் ஒதுக்கீட்டை இறுதி செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT