Last Updated : 12 Feb, 2018 11:42 AM

 

Published : 12 Feb 2018 11:42 AM
Last Updated : 12 Feb 2018 11:42 AM

சென்னையில் காணாமல் போகும் பூனைகள்; சாலையோரக் கடைகளில் பிரியாணியாகிறதா?- அதிர்ச்சித் தகவல்

சென்னையில் சமீபகாலமாக வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் காணாமல்போன நிலையில், அவை சாலையோர பிரியாணிகடைகளில், ஆட்டிறைச்சிக்கு பதிலாக பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்டிறைச்சி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், பிரியாணிக்கு நாய்களை கொன்று இறைச்சியாக பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக சாலையோர பிரியாணிக் கடைகளில் இந்த இறைச்சி பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் கடந்த இரண்டு மாதங்களில் பல வீடுகளில் வளர்க்கப்பட்ட ஏராளமான பூனைகள் காணாமல் போயுள்ளன. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்தப் பூனைகளைப் பிடித்துச் சென்று கொன்று அதன் இறைச்சியை பிரியாணிக் கடைகளுக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது. சாலையோர பிரியாணி கடைகளுக்கு இந்த பூனை இறைச்சி பெரிய அளவில் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக மதுபான கடைகள் அருகே உள்ள சில சாலையோர உணவகங்களில் இந்த இறைச்சி விற்கப்பட்டுள்ளது.

சென்னையில் பூனைகள் காணாமல் போகும் தகவல் வெளியான நிலையில் இதுபற்றி ‘பீப்பிள்ஸ் பார் அனிமல்’ அமைப்பைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸ் உதவியுடன் அந்த அமைப்பினர், நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 40 பூனைகளை பறிமுதல் செய்துள்ளனர், அந்த பூனைகள் தற்போது செங்குன்றத்தில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அந்த அமைப்பின் சென்னை நிறுவனர்களில் ஒருவரான ஸ்ரீரானி பெரிரா கூறியதாவது:

சென்னையில் ஏராளமான பூனைகள் காணாமல் போனதாக தெரிய வந்ததையடுத்து நாங்கள் இதுபற்றி விசாரிக்க தொடங்கினோம். அப்போது பூனைகளை நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் பிடித்துச் சென்று கொடூரமான முறையில் கொன்று, அதன் இறைச்சியை, ஆட்டிறைச்சி எனக்கூறி விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

குறிப்பாக சாலையோர பிரியாணிக் கடைகளில் இந்த இறைச்சி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதை தொடர்ந்து போலீஸாரின் உதவியுடன் அந்த நபர்களை தேடி வந்தோம். அவர்களிடம் இருந்து 40 பூனைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

உரிய நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பூனைக்களை பிடித்து செல்லும் நரிகுறவர் சமூக மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசிடம் பேசி நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். இதன் மூலம் அவர்கள் இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதுடன், பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

சென்னையில் பூனை இறைச்சி பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து சென்னை மாநகராட்சி உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்" எனக்கூறினார்.

இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் அருண் நிர்மலன் கூறுகையில் "இறைச்சிக்காக மட்டுமின்றி மருத்துவ குணம் இருப்பதாக கூறியும் பூனைகள் கொல்லப்படுகின்றன. இதனை நிரந்தரமாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x