

சென்னை: ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்த ஆண்டில் 1,000-வது தானியங்கி ரயில் பெட்டி தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக திகழ்கிறது சென்னை ஐசிஎஃப் (ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை). இங்கு இதுவரை பல்வேறு வகைகளை சேர்ந்த 72,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
நாட்டிலேயே அதிக வேகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் இந்த ஆலை தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இங்கு 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாராகி, ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதற்கிடையே, அம்ரித் பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில் உள்ளிட்ட ரயில்கள் தயாரிக்கும் பணியும் இங்கு நடந்து வருகின்றன. ஏற்கெனவே 2 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரித்து அனுப்பிய நிலையில், கூடுதலாக வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை ஐசிஎஃப் ஆலையில் 2023-24-ம் உற்பத்தி ஆண்டில் 1,000-வது தானியங்கி ரயில் பெட்டி தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: இந்த 2023-24 உற்பத்தி ஆண்டில் 1,000-வது தானியங்கி ரயில் பெட்டியை தயாரித்து, ஐசிஎஃப் சாதனை படைத்துள்ளது. இது இந்திய ரயில்வேக்கு உட்பட்ட ரயில் பெட்டி தொழிற்சாலையின் அதிகபட்ச தயாரிப்பாகும்.
வந்தே பாரத் ரயில் பெட்டி, மின் தொடர் வண்டிக்கான ரயில் பெட்டி (இஎம்யு), நெடுந்தொலைவு மின் தொடர் வண்டிக்கான ரயில் பெட்டி (மெமு), தானியங்கி ஆய்வு ரயில் பெட்டி, தானியங்கி விபத்து உதவி ரயில் பெட்டி போன்றவை இதில் அடங்கும். இந்த சாதனையை படைத்ததற்காக ஊழியர்கள், அதிகாரிகளுக்கு ஐசிஎஃப் பொது மேலாளர் யு சுப்பாராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரயில்களை இயக்க, முன்பக்கத்தில் இழுவை சக்தியுள்ள இன்ஜினும், கடைசியில் உந்து சக்தியுள்ள இன்ஜினும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு மாற்றாக, தற்போது அறிமுகமாகும் புதிய வகை ரயில்களில் பல்வேறு பெட்டிகளிலும் மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் ரயிலை வேகமாக இயக்குவதும், ஆபத்து காலத்தில் உடனடியாக நிறுத்துவதும் எளிதாகும். இது டிபிஎஸ் (Distributed Power System) எனப்படுகிறது. தனியாக மோட்டார் கொண்ட இவை ‘தானியங்கி’ பெட்டிகள் என்று குறிப்பிடப்படுகின்றன.