

ஓசூர்/மேட்டூர்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஆந்திரா, கர்நாடகா எல்லைப் பகுதிகளில் கூடுதலாக சோதனைச் சாவடிகளை அமைத்து, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆந்திர, கர்நாடக எல்லைப் பகுதிகளில் ஏற்கெனவே 9 சோதனைச் சாவடிகள் உள்ள நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூடுதலாக 6 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓசூர் அருகே மாநில எல்லையான ஜூஜுவாடி, கர்னூர், பூனப்பள்ளி மற்றும் தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே, அனுமதித்தனர். மேலும், வாகன சோதனையை வீடியோவில் பதிவு செய்தனர்.
பாலாறு சோதனைச் சாவடி: தமிழக-கர்நாடக எல்லையான காரைக்காடு மற்றும் பாலாறு சோதனைச் சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
தமிழக எல்லைப் பகுதியான, சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காரைக்காடு சோதனைச் சாவடியில் நேற்று தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல, கர்நாடக மாநில எல்லைப் பகுதியான பாலாறு பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கர்நாடக மாநில தேர்தல் அதிகாரிகள், போலீஸார் மற்றும் வனத் துறையினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.