Published : 18 Mar 2024 06:02 AM
Last Updated : 18 Mar 2024 06:02 AM
கோவை/சேலம்: கோவையில் இன்று (மார்ச் 18) பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் பேரணியை முன்னிட்டு 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியான பிரதமர் மோடிஇன்று கோவையில் வாகனப்பேரணி மூலம் வாக்குசேகரிக்கிறார். இதற்காக கர்நாடக மாநிலத்திலிருந்து இன்று மாலை 5.30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோயில் அருகே வருகிறார். மாலை 5.45 மணிக்கு வாகனப் பேரணி தொடங்கி, பூ மார்க்கெட், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி, டி.வி.சாமி சாலை வழியாக ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் நிறைவடைகிறது. சுமார் 2.5 கி.மீ. தொலைவுக்கு வாகனப் பேரணி நடைபெறுகிறது.
தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இன்று இரவு தங்கும் பிரதமர், மறுநாள் காலை விமானம் மூலம் கேரள மாநிலம் புறப்பட்டுச் செல்கிறார்.
இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் கூறும்போது, “வாகனப் பேரணி முடிவில் கோவை தொடர்குண்டு வெடிப்பில் பலியானவர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து பிரதமர் அஞ்சலி செலுத்துகிறார். இந்த நிகழ்வுகளில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.
பிரதமரின் கோவை வருகையை முன்னிட்டு சிறப்புப் பாதுகாப்புப் படையினர் (எஸ்பிஜி), தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி), மத்திய உளவுப் பிரிவு (ஐபி) மற்றும் தமிழக காவல் துறையினர் இணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘பிரதமர் வருகையை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமானம் நிலையம் தொடங்கி, ஆர்.எஸ்.புரம் அஞ்சல் நிலையம் வரையிலான பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்’’ என்றார்.
நாளை சேலம் வருகை: சேலத்தை அடுத்த கெஜல்நாயக்கன்பட்டியில் நாளை (மார்ச் 19) நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கெஜல்நாயக்கன்பட்டிக்கு நாளை மதியம் ஒரு மணியளவில் பிரதமர் வருகிறார். பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், ஹெலிகாப்டர் மூலமாக காமலாபுரம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT