

மயிலாடுதுறை: சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பிறந்த நாள் கொண்டாடிய மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் மீது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மதியம் முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அலுவலகங்கள் வருவாய்த் துறையினரால் பூட்டி `சீல்' வைக்கப்பட்டன.
எனினும், மயிலாடுதுறை எம்எல்ஏ அலுவலக வெளிப்புறவளாகத்தைப் பூட்டி, சீல் வைக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாரின் பிறந்த நாளையொட்டி, நேற்று முன்தினம் எம்எல்ஏ அலுவலக வளாகப் பகுதியில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது கேக் வெட்டப்பட்டு, பிரியாணி விருந்து நடந்துள்ளது. கொண்டாட்டத்தில் எம்எல்ஏஎஸ்.ராஜகுமார் பங்கேற்றார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும், மயிலாடுதுறை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், பட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி அளித்த புகாரின்பேரில், எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவருமான எஸ்.ராஜகுமார் மீது, தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மயிலாடுதுறை போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.