Published : 06 Feb 2018 02:02 PM
Last Updated : 06 Feb 2018 02:02 PM

12 வயதில் சேலையைத் திருடிய நாதுராம்: போலீஸ் விசாரணையில் வெளிவந்த ருசிகர தகவல்கள்

கொளத்தூர் கொள்ளை வழக்கில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொல்லப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நாதுராம் போலீஸ் காவலில் கூறிய ருசிகர தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

நாதுராம் ஜாட் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் நாதுராம் பற்றி கொளத்தூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்திற்குப் பின் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டபோதுதான் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

ஆனால் அதற்கு முன்னரே சென்னை மாதவரத்தில் செல்போன் கடையில் கொள்ளையடித்து அதனால் சிறைவாசம் பெற்றவர் என்பது மிகச் சிலருக்கே தெரிந்த ஒன்று. இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொல்லப்பட்ட பிறகு நாதுராமை போலீஸார் தீவிரமாக தேடி குஜராத்தில் பிடித்தனர்.

பின்னர் ராஜஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்ட நாதுராமை சென்னை போலீஸார் ஜனவரி 26-ம் தேதி அன்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நாதுராமை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். போலீஸ் காவலில் நாதுராம் கூறிய சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

மாணவப் பருவத்திலேயே சேலைத்திருட்டு:

நாதுராம் பள்ளிக்குச் சென்றதில்லை, திருட்டுத்தனம் ரத்தத்திலேயே ஊறிப்போன ஒன்று. முதன் முதலில் தனது மாணவப் பருவத்தில் சேலைகளைக் கடைகளில் திருடி சிக்கிக்கொண்டார். பின்னர் சிறையிலிருந்து வந்த பின்னர் முதல் பெரிய திருட்டை குஜராத்தில் செய்துள்ளார்.

திருடியது எப்படி?

நாதுராம் பெரும்பாலும் களத்துக்கு வருவதில்லை. பெரும்பாலான திருட்டுகள் அதற்கென்று இருக்கும் ஆட்கள் செய்வார்கள். திட்டம் மட்டுமே நாதுராம் போடுவது உண்டு. தனக்கென்று தகவல் தெரிவிக்கும் இன்ஃபார்மர்களை வைத்துக்கொண்டு முழுத்திட்டம் தீட்டிய பின்னர் கொள்ளையடிப்பதுதான் நாதுராம் ஸ்டைல். நாதுராம் குஜராத், ராஜஸ்தானில் திருடி சலித்துப்போகவே, அவர் மனதில் வேறு திட்டம் உதித்தது.

சொந்த ஊர்க்காரர்களிடம் மட்டுமே கொள்ளை:

நாதுராம் இதுவரை கொள்ளை அடித்தது அனைத்துமே ராஜஸ்தானை சேர்ந்த நகைக்கடை, செல்போன் கடைக்காரர்களிடம் மட்டுமே. வேறு மாநிலத்தில் கொள்ளை அடித்தாலும் அவர்களும் ராஜஸ்தான், குஜராத்திலிருந்து சென்று பெரும் பணக்காரர்களாக இருப்பவர்களிடம் மட்டுமே.

திட்டம் உருவாவது எப்படி?

முதலில் நாதுராம் கணக்கெடுத்தது தனது ஊரிலிருந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் பணியாற்றும் இளைஞர்களைத்தான். வேலைக்காக அடுத்த மாநிலத்திற்குச் சென்று தனது வடமாநில நகைக்கடைக்காரர்களிடம் பணியாட்களாக சேர்பவர்கள் தான் நாதுராமின் குறி. முதலில் அவர்களை நட்பு ஏற்படுத்திக்கொண்டு அவர்களுக்கு செலவு செய்து அவர்கள் மனதில் இடம் பிடிப்பதும் பின்னர் மெல்ல மெல்ல கொள்ளை திட்டத்தை அவர்கள் மனதில் விதைத்து தன் வழிக்குக் கொண்டு வருவதும் நாதுராம் ஸ்டைல்.

கொள்ளை அடிக்க வேவு பார்த்து ஒத்துழைப்பு கொடுத்தால் கொள்ளையில் 50 சதவீதம் பங்கு என்பதுதான் நாதுராம் பாணி. இந்த வலையில் வீழ்ந்தவர்களை வைத்து தமிழ்நாடு, ஆந்திரா கர்நாடக மாநிலங்களில் பல கொள்ளைச் சம்பவங்களை நாதுராம் அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொள்ளைக்கு முன்…

நாதுராம் கொள்ளை அடித்ததிலேயே அதிக அளவு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு நகைக்கடையில்தான். அங்கு 10 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்த நாதுராமை இன்றுவரை அந்த மாநில போலீஸார் தேடி வருகிறார்கள். கொள்ளையில் கொஞ்சம் கூட சந்தேகம் வராதபடி வேலையை கச்சிதமாக முடிப்பது நாதுராம் பாணி.

கடையில் வேலை செய்பவர்களை நட்பு ஏற்படுத்திக்கொண்டு அவர்கள் மூலமே திட்டம் போட்டு நல்லதொரு நாளில் கொள்ளையடித்துவிட்டு பேசியபடி தகவல் கொடுத்த நபருக்கு 50 சதவீத நகைகளை கொடுத்து விட்டு சொந்த மாநிலத்திற்கு தப்பிச்சென்று விடுவாராம்.

கொள்ளைக்கு பின்...

நாதுராம், கொள்ளையடித்த பின்னர் சொந்த ஊருக்குச் சென்று பதுங்கிவிடுவார். கொள்ளைச் சம்பவம் பற்றி போலீஸார் விசாரணை போகும் போக்கை பார்த்து அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தெரியவரும் வரை காத்திருந்து பின்னர் நகைகளை உருக்கி விற்றுவிடுவது நாதுராம் வழக்கம். திருடியவுடன் உருக்கி விடு என்பதே நாதுராம் வழக்கம்.

“சார் நான் அவ்வளவு ஒர்த் இல்ல”

ஒருவேலை போலீஸார் கண்டுபிடித்து வந்துவிட்டால் அப்படியே நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து வடிவேலு பாணியில் 'சார் நான் அவ்வளவு ஒர்த் இல்லை திருடியது இதோ இருக்கு' என்று திருடிய நகைகளில் 60 சதவீதம் வரை திருப்பிக் கொடுத்து சரணாகதி அடைந்து தண்டனையையும் அனுபவிப்பாராம். இப்படி சிறையில் சிக்கிய நாட்கள் அதிக பட்சம் 1 வருடம், மற்றதெல்லாம் 9 மாதம், 6 மாதம் என்றுதான் சிறைவாசம் இருந்துள்ளது.

கொளத்தூர் கொள்ளை நடந்தது எப்படி?

கொளத்தூர் கொள்ளைக்கு மூலகாரணமே உரிமையாளர் முகேஷ் தான் என்று நாதுராம் கூறியுள்ளார். ஒருமுறை முகேஷ் சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு பந்தாவாக போயுள்ளார். அவரது தோரணையைப் பார்த்த நாதுராம் எப்படி இவர் இவ்வளவு வசதியாக இருக்கிறார் என்று கேட்டபோது கொளத்தூரில் நகைக்கடை, அடகு கடை வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

உடனடியாக முகேஷுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட நாதுராம் சென்னை வந்துள்ளார். சென்னையில் தனது நம்பிக்கைக்குரிய பக்தாராம் வேலை செய்யும் அவரது மாமா நகைக்கடைக்கு சென்றுள்ளார். பக்தாராமை தனது திட்டத்துக்கு பயன்படுத்திய நாதுராம், பக்தாராம் மூலம் முகேஷ் நகைக்கடைக்கு மேல் கடை ஒன்று காலியாவதை அறிந்து தினேஷ் சௌத்ரியுடன் சேர்ந்து முகேஷை சந்தித்து, 'நாங்கள் துணி வியாபாரம் செய்கிறோம் மேலே உள்ள கடையை எனக்கு பிடித்து தாருங்கள்' என கேட்டுள்ளார்.

முகேஷ் கடையைப் பிடித்துத் தர நாலே நாளில் முகேஷ் கடையின் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இதற்கு உளவு பார்த்தது பக்தாராம். முகேஷ் மதியம் கடையை சாத்திவிட்டு வீட்டுக்கு சென்றவுடன் அவர் வீட்டுக்குள் இருப்பதை தகவல் தெரிவித்து கொள்ளையடிக்க உதவியுள்ளார். பின்னர் மேலே சுவற்றில் துளையிட்டு தினேஷ் சௌத்ரி உள்ளே இறங்கி நகை பணத்தை கொள்ளையடித்தவுடன் அது முடியும் வரை முகேஷ் வீட்டு வாசலில் நின்று பக்தாராம் கண்காணித்துள்ளார்.

தப்பியது எப்படி?

கொள்ளையடித்த பின்னர் எம்.கே.பி நகரில் உள்ள பக்தாராம் நகைக்கடைக்குச் சென்று அனைத்தையும் மூன்று பங்காக பிரித்துக்கொண்டு நேராக திருப்பதிக்கு கால் டாக்ஸியில் தப்பி உள்ளனர். பின்னர் அங்கிருந்து பெங்களூரு சென்ற நாதுராம் நகைகளை அங்கு விற்றுவிட்டு மீதமுள்ள நகை பணத்துடன் ராஜஸ்தானுக்கு தப்பிச்சென்று விட்டார்.

ராஜஸ்தானில் தனக்காக ஒரு கார் மற்றும் ரூ.40 ஆயிரம் கொடுத்து துப்பாக்கி ஒன்றையும் வாங்கியுள்ளார். ராஜஸ்தானில் அரசியலில் ஈடுபட வேண்டும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் நாதுராமுக்கு அதிகம். அதனால் அங்குள்ள தங்களது ஜாதி அமைப்பு தலைவர்களுடன் சேர்ந்து பிரபலமான கட்சி மூலம் தேர்தல் சீட்டு கேட்டுள்ளார்.

போலீஸார் தேடுவதை அறிந்து வெலவெலத்துப்போன நாதுராம் தப்பிக்க நினைக்கையில் பெரியபாண்டியன் விவகாரம் நடக்க,  தப்பிச்சென்று குஜராத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடக, தமிழ்நாடு என்று கொள்ளையடித்தாலும் தமிழ்நாடு போலீஸார் தான் சிறப்பாக தன்னை கண்டுபிடித்து சொந்த ஊர் வரை வந்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

சிக்கியது எப்படி:

நாதுராம் குஜராத்தில் மறைந்திருந்தாலும் நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்பது போல் முகநூலில் தன்னைப்பற்றி பெருமையாக துப்பாக்கியுடன் போட்டவுடன் சென்னை போலீஸார், ராஜஸ்தான் போலீஸாரை நெருக்க குஜராத்தில் இருந்த நாதுராமை எளிதாக தூக்கினார்கள். தினேஷ் சௌத்ரி ஒரு இடத்தில் திருடப்போய் சிக்கி பொதுமக்களிடம் கம்பு கட்டைகளால் அடிவாங்கி போலீஸில் சிக்கினார்.

பெரியபாண்டியன் கொலையில் நடந்தது என்ன?

இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொல்லப்பட்டது குறித்தும் முக்கிய தகவல்களை நாதுராம் கூறியுள்ளதாகவும் அந்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், பெரியபாண்டியன் குறித்த தடயவியல் அறிக்கையுடன் இணைத்து பின்னர் இந்த வழக்கில் வேகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x