Published : 18 Mar 2024 05:59 AM
Last Updated : 18 Mar 2024 05:59 AM
சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, திருமங்கலத்தில் 12மாடி கட்டிடம் வழியாக மெட்ரோரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, இரண்டுகட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், சீனா போன்ற நாடுகளில் இருப்பது போன்று சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்கள் வழியாக மெட்ரோரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, சென்னைதிருமங்கலத்தில் 12 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரயில்கள் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: திருமங்கலத்தில் மேம்பாலம் அருகே 12 மாடி கட்டிடத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தில் 3-வது தளம் வழியாக மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 5-வது வழித்தடத்தில் மாதவரம்-சோழிங்கநல்லூர் தடத்தின் ஒரு பகுதியாக அமைய உள்ளது.
இத்திட்டத்துக்காக, திருமங்கலத்தில் மேம்பாலம் அருகே 3 வீடுகள் இருந்த 450 மீட்டர் நீளமுள்ள நிலம் வாங்கப்பட்டுள்ளது. 12 மாடிகட்டிடத்தை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு ஆலோசனை நிறுவனம்நியமிக்கப்படும். இதற்காக ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. இந்த 12 மாடி கட்டிடத்தில் 4-வது தளத்தில் மெட்ரோ ரயில்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கு மெட்ரோ அலுவலகம், வணிகவளாகம் போன்றவையும் இடம்பெறும். இதுதவிர, கோயம்பேடு, திருமயிலை ஆகிய இடங்களில் கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 3 இடங்களில் நிலையங்களை கட்டுவதற்கான செலவு 2-ம் கட்ட திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநில அரசிடம் நிதி கோரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT