

நாவலூர்: கேளம்பாக்கம் அருகே நாவலூரில் நடிகர் பாபு கணேஷ் என்பவருக்கு சொந்தமான தனியார் வணிக வளாகத்தில் பல்வேறு கடைகள் உள்ளன.
இதில் வாகன நிறுத்தத்தை ஒட்டி டீ, ஜூஸ் விற்பனை செய்யும் கடை உள்ளன. வழக்கம்போல் நேற்று காலை 6 மணிக்கு கடையைத் திறந்து 3 பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இக்கடையில் 4 காஸ் சிலிண்டர்கள் இருந்தன.
காலை 8 மணியளவில் மின்கசிவு ஏற்பட்டு ஒரு காஸ் சிலிண்டரின் மீது தீப்பொறி பட்டு தீப்பிடித்தது. இதையறிந்த 3 பணியாளர்களும் கடையிலிருந்து வெளியேறினர். பின்னர் அடுத்தடுத்து 2 சிலிண்டர்கள் வெடித்ததில் தீ மளமளவெனப் பரவி புகைமூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
தகவல் அறிந்து வந்த சிறுசேரி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் கடையிலிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாகக் கடை உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தாழம்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.