Published : 18 Mar 2024 06:10 AM
Last Updated : 18 Mar 2024 06:10 AM

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களில் தற்காலிக நியமனம் கூடாது: தொழிற்சங்கத்தினர் கோரிக்கை

சென்னை: ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்பும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு பாரதிய போக்குவரத்து தொழிலாளர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.கிருபாகரன், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தற்போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு கேஷுவல் லேபர் என்ற வகையில் தற்காலிக பணியாளர்களை நியமனம்செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.

அவர்கள் ஓட்டுநர், நடத்துநர் பணிக்குமுறையாக பயிற்சி பெற்றவர்கள் அல்ல. இதனால் பெரிய அளவிலான விபத்துகள் நேரிட்டு, அதன் காரணமாக உயிர்சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

போதிய பயிற்சி இல்லை: அண்மையில் தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய பேருந்துகள் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இதேபோல, நடத்துநர்களுக்கும் போதிய பயிற்சி இல்லாத காரணத்தால், பயணிகளுக்கான சேவையில் குறைபாடுகள் ஏற்படும்.

மேலும், அவர்கள் மீது வழக்கு ஏதும் உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கான காவல் துறை சான்றிதழ்களை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்படவில்லை. அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டிவரும். துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்க முடியாது.

இதுபோன்ற பிரச்சினைகளைக் களைய, நேரடி நியமனம் மூலம் நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பதே தீர்வாக அமையும். எனவே, தற்காலிக பணியாளர் தேர்வைக் கைவிட்டு, நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x