

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி, துப்பாக்கி வைத்திருப்போர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்.19- ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தமிழகத்தில் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
காவல் நிலையத்தில்... அதேபோல், வழக்கமாக மேற்கொள்ளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தங்களது சொந்த பாதுகாப்புக்காக உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருக்கும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அருகில் உள்ளகாவல் நிலையத்தில் ஒப்படைக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதியில் உரிமம் பெற்ற 2,700-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நேற்று வரை 700 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.