

திருச்சி: வங்கி ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றுவது தொடர்பாக மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
வங்கி ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. அதன் பொதுச் செயலாளர் எஸ்.கே.பண்ட்லீஸ் தலைமை வகித்தார். முதுநிலை துணைத் தலைவர் கிருபாகரன் முன்னிலை வகித்தார்.
இதில், மும்பையில் கையெழுத்தான இருதரப்பு ஊதிய ஒப்பந்தத்தின் சிறப்புகள், வங்கி வாடிக்கையாளர் நலம், வங்கியின் வளர்ச்சி, 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நிதி சார்ந்த ஊதிய உயர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ஊதிய உயர்வு: கூட்டத்துக்குப் பின்னர், எஸ்.கே.பண்ட்லீஸ் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தக் கூட்டத்தில் ஊழியர் நலன், ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் பணி உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊதிய திருத்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு எங்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமர், நிதியமைச்சர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
புதிய நிர்வாகிகள் தேர்வு: வாரத்தில் 5 நாட்கள் மட்டும் பணியாற்றும் திட்டம் குறித்து மத்திய அரசு இதுவரை தெளிவுபடுத்தவில்லை. மத்திய அரசின் தெளிவான முடிவுக்காக காத்திருக்கிறோம். பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஸ்டேட் வங்கி குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் குறித்து சொல்வதற்கு ஏதுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.