Published : 18 Mar 2024 06:25 AM
Last Updated : 18 Mar 2024 06:25 AM

நாங்கள் யாரையும் மிரட்டி, ரெய்டு நடத்தி பணம் வசூலிக்கவில்லை: பழனிசாமி குற்றச்சாட்டுக்கு டி.ஆர்.பாலு பதில்

சென்னை: நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் கருத்துக்கு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பொதுப்பணித்துறையின் ஒப்பந்தங்களை மொத்தமாக தனது சம்பந்திக்கும், அவர் வழி உறவினர்களுக்கும் கொடுத்து சிக்கிக் கொண்டவர் பழனிசாமி. குட்கா விற்பனையாளர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காக தனியாக ஒரு அமைச்சரை வைத்திருந்தார்.

சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. டிஜிபியே விசாரணையில் சிக்கினார். தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்றது தொடர்பான விசாரணை ஆணையத்தில், `முதலமைச்சரிடம் சொல்லி விட்டுதான் சுட்டோம்' என்று குற்றம் சாட்டப்பட்டவர் பழனிசாமி.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியவர்களைக் காப்பாற்றியவர் பழனிசாமி. கோடநாடு கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளே பழனிசாமி பெயரை வெளியில் சொன்னார்கள். இப்படிப்பட்ட நீண்டதொரு `குற்றப்பட்டியல்' கொண்டவர் பழனிசாமி.

திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் பழனிசாமி. அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலுகையும் திமுக ஆட்சியில் தரப்படவில்லை. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது திமுக அரசுதான்.

பாஜகவை கண்டித்துள்ளாரா? - இப்போது தனது எஜமானர்களான பாஜகவை காப்பாற்றுவதற்காக அறிக்கை விடுகிறார். அமலாக்கத் துறையை வைத்து மிரட்டி, நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பணத்தைப் பறித்துள்ளது பாஜக. பாஜகவால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் அதிகளவு பணத்தை பாஜகவுக்கு வாரி வழங்கி உள்ளன.

இதன் மூலமாக, மிரட்டிப் பணம் பறிப்பது தேசிய அளவில் அம்பலமாகியுள்ளது. பாஜகவால் இதற்கு எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. பாஜக பற்றி பழனிசாமி ஏதாவது கண்டித்துள்ளாரா?

`பாஜகவுடன் கூட்டணியே கிடையாது' என்று சொல்லும் பழனிசாமி, பாஜகவின் மோசடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விடுவாரா? நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்கவில்லை.

மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்கிறார் பழனிசாமி. அவர் கைக்குஅதிமுக எப்போது வந்ததோ அது முதல் அந்தக் கட்சி அதலபாதாளத்தில் போய் கொண்டுஇருக்கிறது. நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் தோல்விய டைந்துள்ளது அவர்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x