

திருச்சி: தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் மு.க.ஸ்டாலின் இருந்த போது, மாணவர்கள், இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பை தரம் உயர்த்துவதற்காக மாநகராட்சிகளில் கோட்டத்துக்கு ஒரு பள்ளிக்கு இன்டர் நெட் வசதியுடன் கூடிய ஒரு கல்வி நூலகம் திறக்க நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி, திருச்சி மாநகராட்சியில் பொன்மலை கோட்டத்துக்கு உட்பட்ட ( தற்போது 2-வது மண்டலம் ) 43-வது வார்டு ( தற்போது வார்டு எண்: 59 ) செங்குளம் காலனி அரசு குடியிருப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி அருகே ரூ.24.30 லட்சம் மதிப்பில் நூலகமும், அருகிலேயே உடற்பயிற்சி கூடமும் கட்டப்பட்டன. 2011-ம் ஆண்டு பிப்.16-ம் தேதி அப்போதைய போக்கு வரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு நூலகத்தை திறந்து வைத்தார்.
ஆயிரம் நூல்கள், இன்டர் நெட் வசதி, கணினி என சகல வசதிகளுடனும் நூலகம் சில நாட்கள் மட்டும் இயங்கியது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், நூலகம் செயல்படாததுடன், போதிய பராமரிப்பின்றி மூடப்பட்டது. இங்கிருந்த புத்தகங்கள் திருடுபோயின. கணினிகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துச் சென்றது. அருகில் உள்ள உடற்பயிற்சி கூடமும் மூடப்பட்டது. அதிலிருந்த பொருட்களும் காணாமல் போய் விட்டன. நூலகமும், உடற்பயிற்சி கூடமும் கடந்த 13 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கின்றன. இதனால், அப்பகுதி மாணவர்கள், இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இது குறித்து பொன்மலைக் கோட்டத்தின் முன்னாள் தலைவர் பாலமுருகன் கூறியது: பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டும் வகையிலும், வேலை தேடும் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்கு தயாராகும் வகையிலும் இந்த நூலகம் திறக்கப்பட்டது. இதே போல, கோ-அபிஷேகபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட ( தற்போது 5-வது மண்டலம் ) உறையூரில் திறக்கப்பட்ட கல்வி நூலகம் இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது. ஆனால். செங்குளம் காலனி நூலகம் கடந்த 13 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. அதேபோல உடற்பயிற்சி கூடமும் மூடப்பட்டுள்ளது என்றார்.
இது குறித்து தற்போதைய 59-வது வார்டு உறுப்பினர் கீதா பால முருகன் கூறியது: 2011-ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் நூலகம் போதிய பராமரிப் பின்றி மூடப்பட்டு விட்டது. நான் கவுன்சிலரான பின்னர், நூலகத்தில் தூய்மை பணியை மேற்கொண்டேன். நூலகத்தை மீண்டும் திறக்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழியிடம் மனு அளித்தேன். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட நூலக அலுவலருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
மாவட்ட நூலக அலுவலர் விசாரித்து விட்டு, மாநகராட்சிக் கட்டுப்பாட்டில் இருப்பதால், தங்கள் ( மாவட்ட நூலக ) பெயருக்கு மாற்றித் தரும்படி கேட்டுள்ளனர். மேலும் 200 பேரை நூலகத்தின் நிரந்தர உறுப்பினராக சேர்க்க அறிவுறுத்தினர். அதன் பேரில் 200 பேரை சேர்த்துள்ளேன். மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் நூலகம் திறக்கப்படும். இது தொடர்பாக மாவட்ட நூலகத்திலிருந்து மாநகராட்சி உதவி ஆணையருக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இது குறித்து மாநகராட்சி உதவி ஆணையர் சாலை தவவளன் கூறும்போது, ‘‘நான் இங்கு வந்து 3 மாதங்கள் தான் ஆகின்றன. எனவே, இதற்கு முன் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. ஆயினும், நூலகத்தை திறப்பது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.