Published : 17 Mar 2024 06:16 AM
Last Updated : 17 Mar 2024 06:16 AM

கோவையில் நாளை பிரதமரின் வாகனப் பேரணி: சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தீவிர ஆய்வு

பிரதமர் வருகையையொட்டி, கோவையில் நேற்று வாகனப் பேரணி ஒத்திகையில் ஈடுபட்ட காவல் துறையினர்.படம்: ஜெ.மனோகரன்

கோவை: கோவையில் நாளை பிரதமரின்வாகனப் பேரணி நடைபெறுவதையொட்டி, சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் நேற்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோயம்புத்தூருக்கு நாளை (மார்ச் 18) வரும் பிரதமர்நரேந்திர மோடி, கவுண்டம்பாளையத்தில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு வாகனப் பேரணி (ரோடு ஷோ) மேற்கொள்கிறார். மாலை 4 மணிக்கு கவுண்டம்பாளையத்தில் தொடங்கும் பேரணி, ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையம் அருகே நிறைவடைகிறது.

பிரதமரின் வாகனப் பேரணியை முன்னிட்டு, கோவையில் 5 அடுக்குபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கோவையில் முப்படை அலுவலகங்கள், காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் ஏற்கெனவே ட்ரோன்கள் பறக்க தடை உள்ளது. பிரதமர் வருகையையொட்டி, துடியலூர், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் பகுதிகளிலும் ட்ரோன்கள் பறக்க காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.

பிரதமரின் வாகனப் பேரணியை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் கடந்த இரு நாட்களாக ஏ.ஐ.ஜி.ராவூப் தலைமையில் கோவையில் முகாமிட்டுள்ளனர். சிறப்புபாதுகாப்புக் குழுவினர் நேற்று பேரணி தொடங்கும் கவுண்டம்பாளையம், முடிவடையும் இடமான ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையம் அருகே ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், பேரணி நடக்கும் வழித்தடங்கள் முழுவதையும் ஆய்வு செய்தனர். அவர்களுடன் மாநகரகாவல் துறை துணை ஆணையர் சரவணகுமார், உதவி ஆணையர் ரவி உள்ளிட்டோரும் சென்றனர். தொடர்ந்து, சிறப்பு பாதுகாப்புப் பிரிவினர், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். மேலும், வாகன ஒத்திகை நிகழ்ச்சியும் காவல் துறையினரால் நேற்று நடத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x