

சென்னை: சென்னை மாவட்டத்தில் 579 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மாவட்டம் முழுவதும் 48 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகைவளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகள் அளவிலும் தலா ஒரு நிலை கண்காணிப்பு குழு, பறக்கும் படை, வீடியோ கண்காணிப்புகுழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. ஊடக கண்காணிப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. சோதனை வாகனங்கள் அனைத்திலும் 360 டிகிரி சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் இடம் பெற்றிருக்கும். அந்த வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படும்.
சென்னை மாவட்டத்தில் மொத்தம் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 944 இடங்களில் 3 ஆயிரத்து 719 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன. பதற்றமானதாக 579 வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 23 ஆயிரத்து 122 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 1950, 1800 425 7012 ஆகிய எண்களை தொடர்புகொண்டு தேர்தல் விதிமிறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். வாக்குப் பதிவுக்கு தேவையான அனைத்து வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
அரசுக்கு சொந்தமான இடங்களில் அரசியல் தொடர்பான சின்னங்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்குள் அகற்ற வேண்டும். தனியார் இடங்களில் அரசியல் தொடர்பான விளம்பரங்கள் இருந்தால் 72 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆர்.லலிதா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கே.ஜெ.பிரவீன் குமார், கட்டா ரவி தேஜா, ச.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்ஒருபகுதியாக சென்னையில் 2 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கெனவே வந்துள்ளனர். அவர்கள் முதற்கட்டமாக துப்பாக்கி ஏந்தியபடி கொடி அணிவகுப்பு நடத்தினர்.