Published : 25 Feb 2018 10:11 AM
Last Updated : 25 Feb 2018 10:11 AM

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சந்தன மரம் வெட்டிக் கடத்தல்?

கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாக எழுந்த புகார் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மருதமலை, சோமையம்பாளையம் வனப்பகுதியை ஒட்டி பாரதியார் பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ளது. வன எல்லையே பல்கலைக்கழகத்தில் எல்லையாகவும் இருப்பதால், இந்த வளாகத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன.

நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன. அதில் பல இடங்களில் விலை உயர்ந்த தேக்கு, சந்தனம் உள்ளிட்ட மரங்களும் உள்ளன. இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று காலை சில மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தது தெரியவந்தது. அதில் ஒரு சில சந்தன மரங்களும் வெட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இரவோடு இரவாக விலை உயர்ந்த மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து வடவள்ளி போலீஸாரிடம் கேட்டபோது, ‘பல்கலைக்கழக வளாகத்தில் மரங்கள் வெட்டப்பட்டிருப்பதாக கூறும் தகவல் உண்மைதான். ஆனால் அதில் விலை உயர்ந்த சந்தன மரங்கள் வெட்டப்பட்டனவா என்பது தெரியவில்லை.

பல்கலைக்கழக நிர்வாகத்திலிருந்து இதுதொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. இருப்பினும் விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘பல்கலைக்கழக வளாகத்தில் எங்கு மரங்கள் வெட்டப்பட்டன என்பது தெரியவில்லை. வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் சுற்றுச்சுவர் ஏதும் இல்லை. அதனால் அங்கு ஏதேனும் நடந்திருக்க வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலும் அதை தடுக்க முடிவதில்லை’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x