Published : 10 Feb 2018 11:38 AM
Last Updated : 10 Feb 2018 11:38 AM

போக்குவரத்து கழக நிதி முறைகேடு வழக்கில் எச்.ராஜா சகோதரர் உட்பட 21 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்: திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கியது

அரசு போக்குவரத்துக் கழக நிதி முறைகேடு வழக்கில் தொடர்புடைய எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தர் உட்பட 21 பேருக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

கடந்த 2006-2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின்போது, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நிதியில் ரூ.32.84 லட்சம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தஞ்சாவூரைச் சேர்ந்த கோவிந்தராஜு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்ய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு கடந்த 2015 ஜூன் 5-ம் தேதி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய மேலாண் இயக்குநர்கள் கோதண்டபாணி, முருகன், ராஜூ, ரங்கராஜ் மற்றும் பொதுமேலாளர்கள், துணை மேலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் மீது கடந்த 9.6.2015-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவின் சகோதரரும், போக்குவரத்து கழகத்தில் பணியாற்றியவருமான எச்.சுந்தரும் அடங்கும். உரிய முகாந்திரம் இல்லாததால் கே.என்.நேரு இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து மொத்தம் 21 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார், கடந்த 29.11.2017 அன்று திருச்சியிலுள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட எச்.சுந்தர் உட்பட அனைவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது.

கேமராவை பறிக்க முயற்சி

நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக் கொண்டவர்கள், மாடியிலிருந்து கீழே இறங்கி வெளியே சென்றனர். அப்போது, நீதிமன்ற வளாகத்துக்குள் எச்.சுந்தர் நடந்து வருவதை படம் பிடித்த வார இதழ் புகைப்படக்காரர் ஒருவரின் கேமராவை எச்.சுந்தர் பறிக்க முயற்சித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x