மின்வாரியத்தில் மின் விபத்துகளால் 9 மாதங்களில் 40 ஊழியர்கள் உயிரிழப்பு

மின்வாரியத்தில் மின் விபத்துகளால் 9 மாதங்களில் 40 ஊழியர்கள் உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழக மின்வாரியத்தில் கடந்த 9 மாதங்களில் 40 ஊழியர்கள் மின்விபத்தால் உயிரிழந்துள்ளனர். வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்குதல், மின்கம்பங்கள், மின்மாற்றிகளை நிறுவுதல் உள்ளிட்ட களப்பணிகளை மின்வாரிய ஊழியர்கள் மேற்கொள்ளும்போது, சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக மின்விபத்துகள் ஏற்படுகிறது. இதில் மின்வாரிய ஊழியர்கள் உயிரிழக்கின்றனர்.

இதன்படி, கடந்த 9 மாதங்களில் பல்வேறு மின் விபத்துகளில் சிக்கி 40 மின்வாரிய ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் 487 பேர் உயிரிழந்துள்ளனர். இவை தவிர, 341 விலங்குகளும் மின்விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன. கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 1,065 மின் விபத்துகள் ஏற்பட்டன. இதில், ஊழியர்கள், பொதுமக்கள் என 809 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து, பாரதிய மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நடராஜன் கூறும்போது, “மின்வாரியத்தில் களப் பணிகளில் போதிய அளவு ஊழியர்களும் இல்லை, உபகரணங்களும் இல்லை. இதனால், குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு அதிகளவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பணிச் சுமை காரணமாக மின்விபத்துகள் ஏற்படுகின்றன.

மேலும், மின்கம்பங்கள், மின்மாற்றிகளை நிறுவும்போது 2 அடுக்கு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், ஊழியர் பற்றாக்குறை காரணமாக போதிய கண்காணிப்பு செய்யப்படாததால் மின்விபத்து ஏற்படுகிறது. அதேபோல், போதிய அளவு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை. இதுவும் விபத்துக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

எனவே, மின்விபத்துகளைத் தடுக்க போதிய அளவு ஊழியர்களை நியமிப்பதோடு, பாதுகாப்பு உபகரணங்களை அதிகளவில் வழங்க வேண்டும். அவை தரத்துடனும் இருக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.சுப்பிரமணியம் கூறும்போது, “மின்வாரியத்தில் 35 ஆயிரம் ஒயர்மேன் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், கேங்மேன்களை தொழில்நுட்ப பணிகளில் மின்வாரியம் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துகிறது. இதுவும் மின்விபத்துக்கான காரணம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in