Published : 16 Mar 2024 06:22 AM
Last Updated : 16 Mar 2024 06:22 AM
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,196 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரத்தம் -எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம், திருநெல்வேலி மாவட்டம்கண்டியப்பேரி அரசு புறநகர் மருத்துவமனை கட்டிடம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு - பச்சிளம் குழந்தை பராமரிப்பு கட்டிடம், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அரசு மருத்துவமனை கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
கோடைகால வெப்பம், வெப்ப அலை பாதிப்புகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் சுகாதாரத் துறையில் உள்ள காலி இடங்கள் தொடர்ந்து நிரப்பப்படுகின்றன. கடந்த மாதம் 1,021 மருத்துவர்கள், 987 தற்காலிக செவிலியர்கள், 332 ஆய்வக நுட்புநர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
2015-ல் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் அவ்வப்போது காலி இடங்களுக்கு ஏற்ப காலமுறை ஊதியத்தில் இருந்து, நிரந்தரம் செய்யப்படுகின்றனர்.
அந்த வகையில் 483செவிலியர் பணியிடங்கள் நிரந்தரஅடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன. புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்த 9,000 கடைகள் மூடப்பட்டுள்ளன.
கோடைகாலம் தொடங்கிவிட்டதால், மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் கோவிந்தராவ், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.நாராயணசாமி, பொதுசுகாதாரம் - நோய் தடுப்பு மருந்துதுறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் - ஊரக நலப் பணிகள் இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT