

தனியார் பள்ளியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் திருவொற்றியூர் சாலையில் பெற்றோர் மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை தண்டையார்பேட்டை கனகர் தெருவில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள ஒரு தனியார் மகளிர் பள்ளி உள்ளது. இங்கு அடுத்த கல்வி ஆண்டிற்கான 6-ம் வகுப்பு மாணவிகள் சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் அவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதாக அறிவித்து இருந்தனர். சுமார் 200 இடங்களுக்கு 1500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வழங் கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலையில் ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளி முன்பு இருந்த அறிவிப்புப் பலகையில் '6-ம் வகுப்பு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என்று எழுதப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு நிர்வாகத்தினருடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். ஆனால் நிர்வா கத்தினர் உரிய வகையில் பதில் அளிக்கவில்லை.
அதைத் தொடர்ந்து திருவொற்றி யூர் சாலையில் வரதராஜ பெருமாள் கோயில் தெரு சந்திப்பில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
காவல் உதவி ஆணையர் தெய்வசிகாமணி, ஆய்வாளர் பாபு ராஜேந்திரபோஸ் மற்றும் காவலர்கள் விரைந்து வந்து சமாதானப் பேச்சு நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.