Published : 04 Feb 2018 10:05 AM
Last Updated : 04 Feb 2018 10:05 AM

பேரறிஞர் அண்ணா 49-வது நினைவு நாள் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி: சென்னையில் 35 கோயில்களில் பொது விருந்து

பேரறிஞர் அண்ணா 49-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணா நினைவு தினம் ஆண்டுதோறும் பிப். 3-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நேற்று அண்ணாவின் 49-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட அணிகளைச் சேர்ந்தவர்களும், கட்சித் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

கோயில்களில் சிறப்பு வழிபாடு

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் முதல்வர் கே.பழனிசாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் பொது விருந்தில் சேவூர் ராமச்சந்திரன், தாம்பரம் செல்வ விநாயகர் கோயில் பொது விருந்தில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 35 கோயில்களில் பொது விருந்து நடைபெற்றது.

அமைதிப் பேரணி

திமுக சார்பில் அண்ணா நினைவு தின அமைதிப் பேரணி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்ட பேரணி அண்ணா சதுக்கம் வரை சென்றது. பின்னர் அங்கு அண்ணா நினைவிடத்தில் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

பல்வேறு கட்சியினர் மரியாதை

தேமுதிக சார்பில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணா உருவப் படத்துக்கு துணை செயலாளர்கள் ப.பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கடற்கரை சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினார். இந்நிகழ்வில், திராவிட கழகத்தினர் கலந்துகொண்டனர். சென்னையில் மதிமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அமைதி ஊர்வலம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட பேரணி அண்ணா நினைவிடம் வரை சென்றது. பின்னர் அண்ணா நினைவிடத்தில் வைகோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

டிடிவி. தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல் எம்எல்ஏ தலைமையில் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தனர். வெற்றிவேல் உள்ளிட்ட சிலரை மட்டும் காவல்துறையினர் அனுமதிப்பதாகக் கூறினர். இதனால் வெற்றிவேலுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், டிடிவி. தினகரன் ஆதரவாளர்கள் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

எம்ஜிஆர் கழக நிறுவனத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x