Published : 15 Mar 2024 06:54 PM
Last Updated : 15 Mar 2024 06:54 PM

கோவையில் பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’வுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

கோப்புப் படம்

சென்னை: கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

கோவை மக்களவை தொகுதியில் பாஜக இருமுறை வெற்றிபெற்றுள்ளது. எனவே, கோவை தொகுதியில் பாஜக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி, வரும் 18-ம் தேதி கோவையில் நடைபெறும் `ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அன்றைய தினம் பிரதமர் மோடி, திறந்த காரில் நின்றவாறு மக்களை சந்திக்கிறார். கவுண்டம்பாளையத்தில் தொடங்கி மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரம் வழியாக தலைமை அஞ்சல் நிலைய சந்திப்பு அருகே `ரோடு ஷோ' முடிவடைகிறது. மொத்தம் 3.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு, காரில் நின்றவாறு பொதுமக்களிடம் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார்.

அவருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். வழிநெடுகிலும், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடியின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் பொதுத்தேர்வு காலகட்டத்தை சுட்டிக்காட்டி ரோடு ஷோவுக்கு கோவை மாநகர காவல் துறை அனுமதி மறுத்திருந்தது. இதையடுத்து, பாஜக சார்பில் ரோடு ஷோவுக்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், "மாலை 5 மணிக்கு பேரணி நடப்பதால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதது. பொதுத் தேர்வை காரணம் காட்டி பேரணிக்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பிரதமரின் பாதுகாப்பை எஸ்பிஜி வீரர்கள் உறுதி செய்து கொள்வார்கள். காவல் துறை ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமே தவிர மத ரீதியாக பதட்டமான பகுதி என்று அனுமதி மறுக்க கூடாது. தலைவர்கள் மக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதால், மக்களை சந்திக்க தடை போடக்கூடாது" என்று தெரிவித்து ரோடு ஷோவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார் .

விசாரணையின்போது "இதுபோன்ற பேரணிகளுக்கு எந்த கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. பாதுகாப்பு காரணங்களில் மாநில காவல்துறைக்கும் சரி பங்கு உள்ளது." என்று தமிழக காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x