

நாகர்கோவில்: பாஜக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று வருவதை முன்னிட்டு கன்னியாகுமரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணியில் இருந்து மதியம் பொதுக் கூட்டம் முடியும் வரை கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து மகாதானபுரம் சந்திப்பு வழியாக செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டத்துக்கு வரும் வாகனங்கள் சரவணந்தேரி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இதுபோல் கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி வரை எந்த வாகனங்களுக்கும், பயணி களுக்கும் அனுமதி இல்லை.
கன்னியாகுமரி வரும் அனைத்து அரசு பேருந்துகளையும் ரயில் நிலையத்துக்கு சிறிது தூரம் முன்பாகவே போலீஸார் நிறுத்தி பயணிகளை இறக்கிச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். கன்னியாகுமரி அரசு சுற்றுலா மாளிகை அருகே பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் கழகம் உள்ளது. பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்திறங்கும் பகுதி அருகே இருப்பதால் பாதுகாப்பு கருதி இங்கிருந்து சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கான படகு போக்குவரத்து இன்று மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது போல் பிரதமர் வந்து செல்லும் வரை கன்னியாகுமரி கடற்கரை மற்றும் பிற பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.