

தமிழ்நாடு காங்கிரஸ் நிதிக்குழு ஆலோசனை கூட்டம் பொருளாளர் ரூபி மனோகரன் முன்னிலையில், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நேற்று நடைபெற்றது.
பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஓரிரு நாட்களில் தொகுதிகள் அடையாளம் காணப்படும். ஒரு சில தொகுதிகள் மாறுவதற்கான வாய்ப்புள்ளன. மதிமுகவும் எங்கள் கட்சிதான் திருச்சியில் யார் போட்டி யிடுவது என்பது குறித்து பேசி தீர்வு காண்போம். குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக டிடிவி தினகரன் பேசியுள்ளார். வழக்குகளுக்கு பயந்து சந்தர்ப்பவாதியாக மாறிவிட்டார்.
அவர் சந்தர்ப்பவாதியாக மாறவில்லை என்றால் ஜெயிலுக்கு போக நேரிடும் என்பதால் பாஜக கூட்டணியில் சேர்ந்து குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசி வருகிறார். உச்சநீதிமன்றத்துக்கு அவமதிப்பு உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் தலைவரான ஆதிஷ் அகர்வாலா, தேர்தல் பத்திரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரின் கடிதம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாக உள்ளது. அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் பத்திர விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துவிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், அந்த ஆணையத்தின் மீதான நம்பகத் தன்மையை கேள்வியெழுப்பும் விதத்தில் உள்ளது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 30 சதவீதம் தான் மத்திய அரசின் நிதி. 70 சதவீதம் தமிழ்நாடு அரசின் நிதி. ஆனால் அத்திட்டத்துக்கு மத்திய பாஜக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது என்றார். கட்சியின் மாநில துணைத் தலைவர் கோபண்ணா, ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.