Published : 15 Mar 2024 04:00 AM
Last Updated : 15 Mar 2024 04:00 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுச்சாலையில் மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் அக்னி கலசத்தை நேற்று மீண்டும் நிறுவினர்.
திருவண்ணாமலை - வேலூர் சாலை விரிவாக்கம் மற்றும் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணியை மேற்கோள்காட்டி, கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் நாயுடுமங்கலம் கூட்டுச்சாலையில் அக்னி கலசம் அகற்றப்பட்டது. இதற்கு, பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன், பேச்சு வார்த்தை நடத்திய மாவட்ட நிர்வாகம், பணிகள் நிறைவு பெற்றதும் மாற்று இடத்தில் அக்னி கலசத்தை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது.
ஆனால் 2 ஆண்டுகள் கடந்தும், அக்னி கலசம் மீண்டும் நிறுவப்படவில்லை. இந்நிலையில், நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையில், ஏற்கெனவே அகற்றப்பட்ட இடத்திலேயே அக்னி கலசத்தை பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடந்த 10-ம் தேதி வைத்தனர். இதையறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினர், அனுமதியின்றி வைத்ததாக கூறி, அக்னி கலசத்தை அகற்றினர். மேலும், 15 பேரை கைது செய்து விடுவித்தனர்.
இதனை கண்டித்து, பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வன்னியர் மக்களின் உணர்வுகளை மதித்து, அக்னி கலசத்தை மீண்டும் அமைக்க அனுமதி கொடுக்க தவறினால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையில், திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் புறவழிச் சாலையில் இருந்து நாயுடுமங்கலத்துக்கு அக்னி கலசத்தை பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் நேற்று வாகனங்களில் சுமார் 16 கி.மீ., தொலைவு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையை சென்றடைந்ததும், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி தலைமையில் ஏற்கெனவே நிறுவப்பட்ட இடத்திலேயே, தடையை மீறி அக்னி கலசத்தை மீண்டும் நிறுவி தீபம் ஏற்றி வணங்கினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து, மாற்று வழியில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT