‘மம்தா பானர்ஜி விபத்தில் காயமடைந்தது அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது’ - முதல்வர் ஸ்டாலின்

‘மம்தா பானர்ஜி விபத்தில் காயமடைந்தது அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது’ - முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் காயமடைந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

“மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சாலை விபத்தில் காயமடைந்ததை அறிந்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன். இந்தக் கடினமான நேரத்தில் அவரை எண்ணிக் கவலை கொள்கிறேன். அவர் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என முதல்வர் ஸ்டாலின் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நெற்றியின் நடுவில் ஆழமான வெட்டு காயத்துடன் முகத்தில் ரத்தம் வழியும் நிலையில் மருத்துவமனை படுக்கையில் மம்தா சிகிச்சை பெறும் புகைப்படங்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. அவர் விரைந்து குணமடைய தங்களது பிரார்த்தனை வேண்டும் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் இந்த காயம் எப்படி ஏற்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. காயத்துக்கு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் வீடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மம்தா பானர்ஜி, விரைந்து குணமடைய வேண்டுமென பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in