Published : 16 Feb 2018 08:01 AM
Last Updated : 16 Feb 2018 08:01 AM

பூண்டி அருகே கைதான மாவோயிஸ்ட் தம்பதி உட்பட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

திருவள்ளூர் அருகே கடந்த 10-ம் தேதி கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தம்பதி உட்பட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று திருவள்ளூர் டிஎஸ்பி புகழேந்தி மனுதாக்கல் செய்துள்ளார்.

திருவள்ளூர் அருகே பூண்டி பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக கடந்த 9-ம் தேதி கிடைத்த ரகசிய தகவலையடுத்து, உள்ளூர் போலீஸார், நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார் பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சோதனை நடத்தினர்.

அப்போது, கடந்த 10-ம் தேதி புல்லரம்பாக்கம் பகுதியில் வந்த ஆட்டோவில் இருந்த மாவோயிஸ்ட் தம்பதியினரான தசரதன், செண்பகவள்ளி மற்றும் தசரதனின் சகோதரர் வெற்றிவீரபாண்டியன் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த மாவோயிஸ்ட் தம்பதியினர் மற்றும் வெற்றிவீரபாண்டியன் ஆகியோரிடமிருந்து மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்பான ஆவணங்கள், நூல்கள், துண்டுப் பிரசுரங்கள், மடிக்கணினி, அலைபேசி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் அரசுக்கு எதிராக கூட்டுச் சதியில் ஈடுபட்டு வந்தது, சட்டத்துக்கு புறம்பாக மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்க முயற்சித்தது போன்ற பிரிவுகளில் புல்லரம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, கடந்த 11-ம் தேதி திருவள்ளூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 முன்பு ஆஜர்படுத்தப்பட்ட மாவோயிஸ்ட் தம்பதி உள்ளிட்ட 3 பேரையும் 4 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கீதா உத்தரவிட்டார். அதன்படி, புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்தது.

ஆகவே, நேற்று அவர்கள் 3 பேரும் திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கான நீதிமன்ற காவலை வரும் 20-ம் தேதி வரை நீட்டித்து மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார். வரும் 21-ம் தேதி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாவோயிஸ்ட் தம்பதி உட்பட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருவள்ளூர் டிஎஸ்பி புகழேந்தி, திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு தொடர்பான விசாரணை வரும் 21-ம் தேதி நடக்கும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x