நீர்நிலைகளில் ஏற்படும் விபத்து மரணங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு

நீர்நிலைகளில் ஏற்படும் விபத்து மரணங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நீர்நிலைகளில் ஏற்படும் விபத்து மரணங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்நிலைகளில் ஏற்படும் விபத்து மரணங்களை தடுக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த கோட்டீஸ்வரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரத்தில் உள்ள தீர்த்தக் கிணறுகளுக்குள் இறங்கி தீர்த்தமாட யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும், தீர்த்தத்தை வாளியில் அள்ளி தெளிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், திருவிழா நேரங்களில் கடலில் குளிப்பவர்களை மீட்க கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, மீட்பு படை மூலமாக மீட்பு பணிகள் அவ்வப்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசு சார்பில் நீர்நிலைகளில் ஏற்படும் விபத்து மரணங்களை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ராமேசுவரத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை மற்ற கடற்கரைகளிலும், கடற்கரை கோயில்களிலும் பின்பற்ற வேண்டும். தமிழக அரசும், அறநிலையத்துறையும் இணைந்து விபத்து மரணங்களை தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை ஆண்டு முழுவதும் எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மீட்பு பணிக்கு கடலோரக் காவல்படையைகூட பயன்படுத்தலாம். இதுதொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். கடல், ஆறு, ஏரி, குளங்களில் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் வகையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள், அவசர கட்டுப்பாட்டு மையங்கள் போன்றவற்றை அமைத்து தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in