Published : 14 Mar 2024 06:32 AM
Last Updated : 14 Mar 2024 06:32 AM

திருச்சி மாநகராட்சி திமுக கவுன்சிலர் ராஜினாமா: தீக்குளிக்கவும் முயன்றதால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய்.

திருச்சி: தனது வார்டுக்கு எந்தப் பணிகளும் செய்து தராததால், திருச்சி மாநகராட்சி திமுக கவுன்சிலர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தீக்குளிக்கவும் முயன்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாதாரணக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் திமுக கவுன்சிலர்காஜாமலை விஜய் பேசும்போது, ‘‘எனது வார்டில் எந்தப் பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்வதில்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்ய சொன்னால் செய்வதில்லை. நூலகம், கம்போஸ்ட் மையம் அமைக்க வேண்டும் என்று கேட்டேன். அதையும் அமைத்து தரவில்லை. புதை சாக்கடை கழிவுநீர் அடைப்புகளை நீக்குவதில்லை.

எனது வார்டு மக்களுக்கு தேவையான கோரிக்கைகள் எதையும் செய்து தராத நிலையில், மக்களைச்சந்திக்க எனக்கு அவமானமாக உள்ளது. எனவே, எனது பெற்றோரைவிட மிகவும் மேலாக மதிக்கும், எனக்கு இந்த வாய்ப்பை அளித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ எனக்கூறி கண்ணீர்விட்டு அழுதார்.

பின்னர், ராஜினாமா கடிதத்தை மேயர் அன்பழகன், ஆணையர் சரவணன் ஆகியோரிடம் வழங்கிவிட்டு வெளியேற முயன்றார். அவரை சக திமுக கவுன்சிலர்கள் மறித்து முடிவை வாபஸ் வாங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அதற்கு அவர், ‘என்னைத் தடுக்காதீர்கள். தடுத்தால் தீக்குளிப்பேன்’ என்றபடி வெளியேறி, மாநகராட்சி அலுவலகத்திலிருந்து காரில் சென்று விட்டார். சிறிதுநேரத்தில் மீண்டும் மாநகராட்சி அலுவலகத்துக்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்து, போர்டிகோ முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து, பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி, அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.

இந்தச் சம்பவம் குறித்து மேயர் அன்பழகனிடம் கேட்டபோது, ‘‘அவரது வார்டில் பல்வேறு நலத்திட்டபணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர் உணர்ச்சிவசப்பட்டு ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்கப் போவதில்லை’’ என்றார்.

அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான காஜாமலை விஜய், திமுக எம்.பி. திருச்சி சிவாவின் வீட்டைத் தாக்கியது, செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகுந்து காவலர்கள் மற்றும் விசாரணைக்கு அழைத்து வந்தவர்களை தாக்கியது ஆகிய காரணங்களுக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். ஆனாலும், கட்சி நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவரைக் கட்சியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x