

சென்னை: சென்னையில் இருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை கடந்த 7 ஆண்டுகளாக முடிக்காதது ஏன் என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பாமக செய்தி தொடர்பாளரும், சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவைத் தலைவருமான வழக்கறிஞர் கே.பாலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: சென்னையிலிருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, நெய்வேலி வழியாக கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் செல்லும் சாலை மோசமாக இருந்ததால் கடந்த 2017-ல் இதனை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கின.
ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக இந்த பணி முடிவடையாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் சுமார் 160 கி.மீ. தூரத்துக்கு இந்த மார்க்கமாக வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு சாலை குண்டும், குழியுமாக கிடப்பதால் இரவு நேரங்களில் செல்வோர் விபத்தில் சிக்க நேரிடுகிறது.
இந்த சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக உளுந்தூர்பேட்டை ஆண்டிமடம் வழியாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு அதிக சிரமம் ஏற்படுகிறது.
நான்கு வழிச்சாலையாக முழுமையாக மாற்றப்படாத விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் சுங்க கட்டணமாக ரூ.100 வசூலிக்கின்றனர்.
எனவே பணிகளை துரிதப்படுத்தி முடிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான கே.பாலு ஆஜராகி, இந்த சாலை விரிவாக்கப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார்.
அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த சாலை விரிவாக்கப் பணிகள் மூன்று கட்டமாக நடைபெற்று வருகிறது என்றும், பல்வேறு இடர்பாடுகள் காரணமாக பணிகளை குறித்த நேரத்துக்குள் முடிக்க முடியாமல் காலதாமதம் ஆகியுள்ளது என்றும், எவ்வளவு விரைவாக இப்பணிகளை முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், இந்த தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை கடந்த 7 ஆண்டுகளாக முடிக்காதது ஏன் என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.10-க்கு தள்ளி வைத்துள்ளனர்.