Published : 14 Mar 2024 06:20 AM
Last Updated : 14 Mar 2024 06:20 AM
சென்னை: மதுராந்தகத்தில் பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்கக்கோரி வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதையடுத்து இதுதொடர்பாக பொதுநல வழக்கு குழுவுக்கு பரிந்துரை செய்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த மோனிஷ், கமலேஷ், தனுஷ், ரவிச்சந்திரன் ஆகிய 4 கல்லூரி மாணவர்கள் கன்டெய்னர் லாரி ஒன்று பேருந்தின் பக்கவாட்டில் உரசியதில் 4 பேரும் உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாகதாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டுமெனக்கோரி வழக்கறிஞர் ஆர்.ஒய். ஜார்ஜ் வில்லியம்ஸ், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார். அதற்கு தலைமை நீதிபதி, இதுதொடர்பாக நீங்களே ஏன் பொதுநல வழக்கு தொடரக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.
தானியங்கி கதவு பொருத்துதல்: அதற்கு வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், ‘‘இதுதொடர்பாக உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தால் இதுபோன்ற அசம்பாவிதங்களை இனிமேல் நடக்காமல் தடுக்கலாம். மேலும் அனைத்து பேருந்துகளின் படிக்கட்டுகளிலும் தானியங்கி கதவுகளைப் பொருத்தியிருந்தால் 4 கல்லூரி மாணவர்கள் அநியாயமாக உயிரிழந்திருக்க மாட்டார்கள்.
உரிய வழிகாட்டி நெறிமுறைகள்: மேலும் இந்த சம்பவத்தைதங்களின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன். தமிழகம் முழுவதும் பேருந்து படிக்கட்டுகளில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் தொங்கியவாறு பயணம் செய்வதை தடுக்க உரிய வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றார்.
அதையடுத்து, நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிப்பது குறித்து பொதுநல வழக்கு குழுவுக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT