Published : 14 Mar 2024 06:19 AM
Last Updated : 14 Mar 2024 06:19 AM
சென்னை: அறிஞர்கள் கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோர் குறித்த ஆளுநரின்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சிஎஸ்ஐ சினாடு மாமன்றம் சார்பாக சென்னை, வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டtர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அறிஞர் கால்டுவெல் குறித்து கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். பல முனைகளில் இருந்தும் அவரது கருத்துக்கு கண்டனங்கள் எழுந்தன. இவ்வாறு தேர்தல் நேரத்தில் சமூக பதற்றத்தை ஏற்படுத்துவது சங் பரிவார் அமைப்புகளின் யுக்திகளில் ஒன்று.
அந்த வகையில் ஆர்எஸ்எஸ் தொண்டனாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, முஸ்லிம்களை சீண்டுவதைபோல கிறிஸ்தவர்களையும் சீண்டுகிறார். அந்த போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்த கருத்துக்கு ஆளுநர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தேர்தல் நேரத்தில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.
மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் சதி முயற்சிதான் சிஏஏ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான காரணம். இதைக் கண்டித்து நாளைமாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழகம் மட்டுமல்ல எந்த மாநிலத்தில் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டாலும் பிரதமர் சென்று பார்ப் பதில்லை. இதுவரை மணிப்பூருக்கு அவர் செல்லவில்லை. அங்கு நாள் தோறும் கலவரம் பற்றி எரிகிறது, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தேர்தலுக்காக ஒரே மாநிலத்துக்கு திரும்ப திரும்ப பிரதமர் வரும் நிலையை நாம் பார்க்கிறோம். இதன் மூலம் அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.மக்கள் நலனை விட தங்கள் அரசியல் ஆதாயம்தான் முக்கியம் என கருதக் கூடியவர்கள் அவர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT