

சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்க பொதுச்செயலாளர் அ.ஜாஹிர் ஹுசைன் தலைமையிலான நிர்வாகிகளுடன் ஆணையர் அ.சண்முகசுந்தரம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது, ‘‘உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை விரைந்து உயர்த்த வேண்டும். இது தொடர்பாக அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இதேபோல், கார்களுக்கான வாடகைக் கட்டணமும் நிர்ணயிக்கப்பட வேண்டும். மினி வகை கார்களுக்கு 5 கிமீ-க்கு ரூ.200 என்ற வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும்’’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதற்கு போக்குவரத்து ஆணையர் பதில் கூறும்போது, ‘‘ஆட்டோமீட்டர் கட்டணம் உயர்த்துவது தொடர்பான அனைத்து கோப்புகளும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதே நேரம், மீட்டர் கட்டணம் தொடர்பாக அமைச்சர் சென்னை திரும்பியவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
வாடகை வாகனங்களை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதலும் தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதுவரை 3 மாதங்களுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் கார்ப்பரேட் வாடகை வாகன நிறுவனங்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும்’’ என்றார்.