தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் குழு இணையவழியில் ஆலோசனை

தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் குழு இணையவழியில் ஆலோசனை

Published on

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தலைமையில் முன்னாள் மாநிலத் தலைவர்கள், எம்எல்ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் அடங்கிய 31 பேர் கொண்ட தேர்தல் குழு கடந்த ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே போட்டியிட்ட திருவள்ளூர், ஆரணி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவிடம் காங்கிரஸ் கோரியுள்ளது.

5 தொகுதிகள்: இதில் ஆரணி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கரூர், தேனி ஆகியதொகுதிகளில் திமுக போட்டியிடவிரும்புவதாக அக்கட்சி நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினிடம் முறையிட்டதாகக் கூறப்படுகிறது. திருச்சி தொகுதி வைகோவின் மகன் துரை வைகோவுக்கு ஒதுக்கவும் திமுக ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டம், கட்சியின் மேலிடப் பார்வையாளர் அஜோய்குமார் தலைமையில் இணையவழியில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய செயலாளர் சிரிவெல்லபிரசாத், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், மாநில முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் ஆரணிக்கு மாற்றாக கடலூர், திருச்சிக்கு மாற்றாக மயிலாடுதுறை, கரூருக்கு மாற்றாக ஈரோடு போன்ற தொகுதிகளை கோரலாமா என்பது குறித்தும், தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வது, அகில இந்திய தலைவர் கார்கே தலைமையில் பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டம் நடத்துவது மற்றும் தொகுதியில் செல்வாக்குள்ள வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in