Published : 01 Feb 2018 09:27 AM
Last Updated : 01 Feb 2018 09:27 AM

152 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட அரிய முழு சந்திர கிரகணம்: சென்னையில் மேகமூட்டத்தால் தாமதமாக தெரிந்தது

152 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய நிகழ்வாக முழு சந்திர கிரகணம் நேற்று ஏற்பட்டது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், மாலை 6.50 மணிக்குப் பிறகே பொதுமக்கள் பார்க்க முடிந்தது.

சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே பூமி வரும்போது பூமியின் நிழல் நிலவு மீது விழும். இந்த நிகழ்வு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின்போது நிலவின் மீது நிழல் படிப்படியாக ஆக்கிரமித்து, முழு நிலவையும் மறைக்கும். வழக்கமாக ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை நடைபெறும் சந்திர கிரகணத்தில் நேற்றைய நிகழ்வு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

கூடுதல் பிரகாசம்

இந்த சந்திர கிரகணம் ஜனவரி மாதத்தில் 2-வதாக வரும் பவுர்ணமி தினத்தன்று (நேற்று) நிகழ்ந்துள்ளது. மேலும் சந்திர கிரகணம் நிகழ்ந்த நேரத்தில் பூமிக்கு அருகில் நிலவு வந்ததால் இயல்பைவிட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் பிரகாசமாகவும் தெரிந்தது. அதனால் இந்த நிகழ்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வு 152 ஆண்டுகளுக்கு முன்பு, 1866-ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது.

இந்த சந்திர கிரகணம் மாலை 5.18 மணிக்கு தொடங்கியது. சென்னையில் மாலை 6 மணிக்குப் பிறகே அடி வானத்தில் இருந்து நிலவு மேலெழுந்ததாலும், அப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதாலும் மாலை 6.50 மணிக்கு பிறகே சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க முடிந்தது.

அப்போது பூமியின் நிழல் மெல்ல மெல்ல நிலவை மறைத்து, இரவு 7.38 மணி அளவில் முழுமையாக மறைந்து முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நிலவு மீது இருந்த நிழல் படிப்படியாக விலகி இரவு 8.41 மணி அளவில் முழுமையாக விலகியது.

4,000 பேர் பார்வை

இந்த அரிய நிகழ்வைப் பார்வையிட சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்கள் பார்வையிட 7 அதிநவீன தொலைநோக்கிகள் வைக்கப்பட்டிருந்தன. வானில் மேகமூட்டம் நிலவியதால், பார்வையாளர்கள் தொலைநோக்கி மூலமாக நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு பார்வையிட்டனர். சுமார் 4,000 பேர் நீண்ட வரிசையில் நின்று சந்திர கிரகண நிகழ்வை பார்வையிட்டுச் சென்றனர். இந்நிகழ்வு குறித்து பெரிய காட்சித் திரைகள் மூலமாக விளக்கவும் பிர்லா கோளரங்க நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

கடற்கரைகளில் கூட்டம்

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்து தொலைநோக்கி மூலமாகவும், வெறும் கண்களாலும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். திருவான்மியூர் கடற்கரைப் பகுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சந்திர கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x