Published : 14 Mar 2024 04:00 AM
Last Updated : 14 Mar 2024 04:00 AM

குஷ்பு உருவப்படத்தை எரித்தபோது திமுக எம்எல்ஏ தமிழரசி சேலையில் பற்றிய தீ

சிவகங்கை: சிவகங்கையில் நடிகை குஷ்பு உருவப் படத்தை எரித்த போது தமிழரசி எம்.எல்.ஏ. சேலையில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தோர் உடனடியாக தீயை அணைத்தனர்.

சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு மகளிர் உரிமைத் தொகை குறித்து கொச்சைப் படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, திமுக மகளிரணி சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பவானி கணேசன் தலைமை வகித்தார்.

மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஜோன்ஸ் ரூசோ, மணி முத்து, நகராட்சித் தலைவர் சி.எம்.துரை ஆனந்த், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதா, துணை அமைப்பாளர் திலகவதி, ஒன்றியச் செயலாளர் வசந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் குஷ்பு-வின் உருவப் பொம்மையை எரிக்க வந்தனர்.

இதைப் பார்த்த போலீஸார், அந்த பொம்மையை எரிக்கவிடாமல் பறித்து சென்றார். இதையடுத்து அங்கிருந்த நிர்வாகிகள் தங்களது கையில் இருந்த குஷ்புவின் உருவப் படத்தை எரித்தனர். தீ வேகமாக பற்றியதால் உருவப் படத்தை அப்படியே கீழே போட்டனர். அப்போது தீப் பொறி தமிழரசி எம்எல்ஏ சேலையில் பற்றியது. அங்கிருந்த நிர்வாகிகள் உடனடியாக தீ பரவாமல் அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x