

ஆழ்துளைக் கிணறு தண்டனைச் சட்டத்தால் உணவு உற்பத்தி பாதிக்கும் என்றும், சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராமகவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்ப்பிடுவதாவது:
’தமிழகத்தில் ஆற்றுக் கால்வாய், கிணறுகள் மூலம் விவசாயம் செய்யப்பட்டுவந்தது. தொடர் வறட்சியால் தற்போது ஆழ்துளைக் கிணறு அமைத்து, சுமார் 1,500 அடி ஆழத்தில் இருந்து தண்ணீரை எடுத்து விவசாயம் செய்யப்பட்டுவருகிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், பருத்தி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தன் உழைப்பை கணக்கிடாமல் உற்பத்திசெய்து விவசாயிகள் வழங்கி வருகின்றனர்.
தற்போது தமிழக அரசு, விவசாயிகளுக்கு தொல்லைத் தருவதுபோல் கொண்டுவந்துள்ள ஆழ்துளைக் கிணறு மசோதா முற்றிலும் விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளது. எங்கோ ஒரு விபத்து நடக்கிறது என்பதற்காக ஆழ்துளைக் கிணறுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் அனுமதிச் சான்றைப் பெறவேண்டும் என்றால், குறைந்தது ஒரு ஆழ்துளைக் கிணறுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவு செய்யும் நிலை ஏற்படும். ஊழல் நடப்பதற்கு வழிவகுக்கும்.
எனவே, ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டுமே தவிர, ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு சட்டம் கொண்டுவரக் கூடாது. இதனால் உணவு உற்பத்தி குறையும். வேலையற்றோர் அதிகமாவார்கள்.
எனவே, விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்வர் இந்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.