Published : 02 Feb 2018 06:03 PM
Last Updated : 02 Feb 2018 06:03 PM

வாக்கி டாக்கி கொள்முதல் முறைகேடு; டிஜிபி மீது நடவடிக்கை கோரி பொதுநல வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து 11 வினாக்களை எழுப்பி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருந்தார்.

அதில் வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரிய மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு 83.45 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையைச்சேர்ந்த செந்தில் முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், 2017-18 ம் ஆண்டில் காவல்துறையை நவீனமயமாக்க 47.56 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதை கொண்டு 10 ஆயிரம் வாக்கி-டாக்கிகள் வாங்கப்பட வேண்டும். ஆனால், அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக, 4000 வாக்கி டாக்கிகளை கொள்முதல் செய்ய 83.45 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இது விதியை மீறிய செயல் என்றும், 83.45 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள நிறுவனத்திற்கு தகவல் தொடர்பு கருவிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான உரிமம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது. டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை ச்செயலாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்திரிகைச் செய்தி அடிபடையிலும், வாய்மொழித் தகவல் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவித்த நீதிபதிகள், தொழில்நுட்ப ரீதியான அனுபவங்கள் மனுதாரருக்கு இல்லை, விலை சரியா தவறா என முடிவுசெய்யும் நிபுணத்துவமும் இல்லை என தெரிவித்தனர்.

மேலும், மக்களின் வரிப்பணம் வீணாகக் கூடாது என தடுக்க வேண்டிய உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என்றாலும், ஆனால் வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ள மனுவை ஏற்க முடியாது எனவும் கூறி  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x