Published : 14 Mar 2024 04:04 AM
Last Updated : 14 Mar 2024 04:04 AM

“திமுக வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு” - துரைமுருகன் தகவல்

காட்பாடியில் கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தை அமைச்சர் துரைமுருகன் நேற்று திறந்து வைத்தார். அருகில், மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணைமேயர் சுனில்குமார் உள்ளிட்டோர்.

வேலூர்: தமிழ்நாட்டில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே ரூ.3 கோடி மதிப்பிலான புதிதாக அமைக்கப்பட்டுள்ள கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் பங்க்கை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று திறந்து வைத்து பேசும்போது, ‘‘ஒரு பெட்ரோல் பங்கை திறப்பதற்கு கூட இவ்வளவு பெரிய விழாவா? என நான் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு அரசாங்க பெட்ரோல் பங்க். மக்களுக்கு தரத்துடன் பெட்ரோலை வழங்குவது இதனுடைய நோக்கம். அப்படியானால் தரத்தோடு வழங்காதவர்கள் உண்டா? என்றால் உண்டு.

பல பேர்கள் கொஞ்சம் பெட்ரோலை போட்டுவிட்டு மண்ணெண்ணெய் கலந்து விடுவார்கள். அப்படிப்பட்ட பங்குகளும் உண்டு. நேர்மை இல்லாத பங்குகளும் உண்டு. பெட்ரோல் போடும்போது மீட்டர் சரியாக உள்ளதா? என கண்ணில் பார்த்து போட்டுக்கொள்ள வேண்டும். தரமானதாகவும், நேர்மையானதாகவும், வாடிக்கையாளர்களுக்கு திருப்தி ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இந்த பெட்ரோல் பங்க் செயல்பட வேண்டும் என வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கர்நாடக அரசில் என்றைக்காவது, எந்த அமைச்சராவது தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவோம் என தெரிவித்ததாக கேள்விப்பட்டது உண்டா?. எப்போது பார்த்தாலும் இப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் சென்று தான் நாம் தண்ணீரை பெற்றுக் கொண்டிருக்கிறோம். தண்ணீரை கர்நாடகாவில் இருந்து எப்படி பெறுவது என எங்களுக்கு தெரியும்.

வழக்கறிஞர்கள் பேச்சு வார்த்தை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு, மாநிலங்களைவையில் அதிமுக எதிர்த்து வாக்களித்து இருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது. காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை முடிந்ததும், திமுக வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும். பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பான வழக்கில் வழக்கறிஞர்கள் உரிய வகையில் பேசுவார்கள்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x